ஈழத் தமிழினத்தின் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக அறுத்துவிடும் கொடுங்கனவோடு பேரினவாதம் தன்னுடைய கறுப்புக் கரங்களை காலங்காலமாக நீட்டி வந்திருக்கின்றது. புத்தன் இந்த உலகிற்கு போதித்த நீதிக்கு நேர் மாறான சிந்தனையொன்றை தன்னுடைய பேரினவாத கோட்பாடாக இனத்தினதும் மதத்தினதும் பெயரினால் தென் இலங்கையின் அதிகார பீடங்கள் பல நூற்றாண்டு காலமாக முன்னெடுத்து வருகின்றன.
அந்தச் சிந்தனைகளுக்கு எதிராக பாரம்பரிய உரித்துக்களையும் உரிமைகளையும் நெஞ்சில் ஏந்திப் போராடும் இனமாக தமிழ் மக்கள் எப்போதுமே நெஞ்சுரத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த நெஞ்சுரத்தை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடுரங்களைக் கொண்டு அடக்கி ஒடுக்கிவிட முடியும் என்று தென் இலங்கையும், அதன் இணக்க சக்திகளும் நம்பின.
ஆனால், முள்ளிவாய்க்கால் முடிகளைக் கடந்தும் உரித்துக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிக்காகவும் போராடும் நெஞ்சுரத்தை தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அது, காலங்காலமாக பேரினவாதத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆன்மாக்கள் வழங்கிய நெஞ்சுரம். மாண்டவர்களின் கனவுகளை ஓர் இனமாக சுமந்தாக வேண்டிய கடப்பாடு.
முள்ளிவாய்க்காலில் வைத்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலிவாங்கப்பட்டு இன்றோடு 12 ஆண்டுகளாகிறது. இன்னமும் முள்ளிவாய்க்கால் துப்பாக்கி முனைக்குள் கிடக்கிறது. நினைவேந்தல் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்து உடைக்கப்பட்டிருக்கின்றது. தமிழின அழிப்பை நினைவுகூரும் வகையில் நாட்டப்படவிருந்த நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.
உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு எதிராக அடக்குமுறைகளை ஏவும் இனவாத சிந்தனை என்பது தாழ்வுச் சிக்கலாலும் எழுவது. அதனை தலைமுறை தலைமுறையாக தென் இலங்கையின் அதிகார பீடங்கள் கடத்த முனைகின்றன. அவ்வாறான இழிகுணங்களை தாண்டி நின்று உலகத்துக்கு தமிழ் மக்கள் செய்திகளை உரத்துச் சொல்ல வேண்டும். அதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பெரும் சபதமாக மேற்கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களின் ஆன்மாக்களும், அவர்களுக்காக நாளாந்தம் ஏங்கித் தவிக்கும் உறவுகளும் வேண்டிக் கொள்வது நீதியை. அந்த நீதி இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியாக மாத்திரமல்லாமல், உரித்துக்கள் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். அவற்றுக்கான போராட்டத்தினை எந்தவொரு தருணத்திலும் நிறுத்திவிடக்கூடாது என்பதை முள்ளிவாய்க்கால் நினைவுகள் ஒவ்வொரு நொடியும் தமிழ் மக்களின் காதுகளில் உரக்கக் கூறிக் கொண்டே இருக்கும். அதனை மனதில் ஏற்றி இன அழிப்பை எதிர்கொண்டிருக்கிற இனமாக தமிழினம் ஒற்றுமையாக எழுந்து நிற்க வேண்டும். அதுதான், தமிழின இருப்பை காப்பாற்றும். அந்த இருப்பு மாண்டவர்களின் ஆன்மாக்களுக்கு ஓர் ஆறுதலைக் கொடுக்கும். அதுவே முள்ளிவாய்காலின் சபதமாகத் தமிழ்மக்கள் ஏற்க வேண்டும்.