தனது 11 வயதில் கண்டறியப்பட்ட வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டை நீக்கும் சிகிச்சைக்கு மாதமொன்றுக்குத் தேவையான 900 டொலர் பணத்தை திரட்ட முடியாத நிலையில், ஆர்ஜென்டினாவிலிருந்து ஸ்பானியாவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தவன் சிறுவன் மெஸ்ஸி. 16 வயதில் காற்பந்தாட்டக் களப் போட்டிகளில் அதிகாரபூர்வமாக விளையாடத் தொடங்கியவனின் நெடுநாள் கனவு உலகக் கோப்பை .
2022ல் இறுதியில் கட்டார் நாட்டில் நடந்த உலகக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனாகவிருந்த பிரான்ஸ் அணியினை 4:2 எனும் கோல் கணக்கில் வெற்றி கொண்ட ஆர்ஜென்டினாவின் வெற்றியுடன் மெஸ்ஸியின் நீண்ட பெருங்கனவு பலித்தது. கூடவே ஆர்ஜென்டினா அணி 36 ஆண்டுகளுக்குப் பின்மூன்றாவது முறையாக உலகக் கோப்பை வென்றதும் நிகழ்ந்தது.
இது அவ்வளவு சுலபமாகக் கிடைத்த வெற்றியல்ல. கட்டாரின் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் எதிராக நின்றாடி, அதிரடியாக கோல்களை அடித்த எம்பாப்பேயின் பிரான்ஸ் அணியுடனான கடும் சமராடலில் கிடைத்த வெற்றி.
உலகின் முக்கிய விளையாட்டு பத்திரிக்கைகள், புகழ்பெற்ற காற்பந்து வீரரான மாராடோனாவையும் மெஸ்ஸியையும் ஒப்பிட்டு எழுதியுள்ளன. ஸ்பானிய பத்திரிக்கையொன்று மெஸ்ஸிக்கு "மெஸ்ஸிடோனா" என்று பட்டப்பெயர் வைத்து எழுதியது. மாராடோனாவால் காற்பந்தாட்டத்தில் தனது " வாரிசு " எனவும், விளையாட்டுலகில் " புதிய மாராடோனா" எனவும் அழைக்கப்பெற்ற லியோனல் மெஸ்ஸி, தனது கனவு வெற்றியின் பின், " இந்த கோப்பையைப் பாருங்கள், அழகாக இருக்கிறது. கடவுள் எமக்கு அதைத் தருவார் என்று எனக்குத் தெரியும். எனக்குள்ளான ஒரு உணர்வு அதைச் சொல்லிய வண்ணமேயிருந்தது " என்கிறார்.
பால்யத்தில் வாழ்வதற்கே சிரமப்பட்ட ஒரு விளையாட்டு வீரனின் கடினமான பயிற்சிக்கும், திடமான நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றியின் அடையாளமாக, ஆர்ஸென்டினா அணியின் கைகளில் தவழ்ந்து , ஐரோப்பாவிலிருந்து தென் அமெரிக்காவிற்குப் பயணிக்கிறது உலகக் கோப்பை.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்