"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
சற்று யோசிக்கத் தொடங்கிய வயதில் "சும்மாயிரு" என்பது, நம் எண்ணத்தை, உழைப்பை, உயர்வை, மட்டுறுத்தும் ஒரு சொற்கட்டுப் போல் தெரிந்தது. காலம் வேகமாக ஒடி, திருமூலர் முதல், யாழ்ப்பாணத்து யோகர்சுவாமிகள் வரை, வாழ்வின் தத்துவார்த்தம் உணர்ந்த உலக ஞானிகள் பலரது ஒருமித்த சொற்கோர்வைதான் " சும்மா இரு" என்பதைக் கற்றுத் தந்தது.
"சும்மாயிரு" எனும் அந்த இரட்டைச்சொல்லுக்குள் ஆழப் புதைந்திருக்கும் அரும் பொருள் புரியத் தொடங்குகையில், எங்கிருந்தோ ஒரு வெண்புறா இறக்கை அடித்து வந்து எம் இதயக் கூட்டுக்குள் அமைதியுற்றது. இப்போது " சும்மா இரு " எனும் அந்தச் சொற்கட்டு மட்டுமல்ல, சூழ உள்ள யாவும், அழகாய், அமைதியாய், தெரிவதாய் உணர்வின் தொடக்கம்.
அன்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில், எழுத்தாளரும், கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான இரவி சுப்ரமணியம் அவர்கள், கு.ப.ராவின் மேற்கோள் ஒன்றை எடுத்துரைத்தார்.
ஒரு சாதாரண வாசகன் மெல்ல மாறி சமபுரிதலுள்ள, சகிர்தையனாகின்றான்.
ஒரு நல்ல சகிர்தையன் எழுத்தாளானாகின்றான்.ஒரு எழுத்தாளன் உருமாறி படைப்பாளியாகின்றான்.
நல்ல படைப்பாளி கனிந்து கலைஞனாகின்றான். நல்ல கலைஞன் முற்றிக் கனிந்து ஞானியாகின்றான்
தெளிந்த ஞானி சொற்களற்றுப் போகின்றான்.
எழுத்துக்காகச் சொல்லப்பட்ட இந்த வாசகங்கள் கலைக்கும் பொருந்தும் எனச் சொல்லித் தொடர்கையில், கலைகளின் அதியுன்னதம் அமைதியுறச் செய்தல் என நிறைவு செய்வார்.
ஆன்மீகமும், அறநெறிகளும், கவின்கலைகளும், மனித மனங்களில் உன்னதமான உயர்வுப் பரவசம் தோற்றுகையில், அங்கே பிற்க்கும் ஞானப் பெருவெளியில் தோன்றுவது அழகுறு அமைதி. அந்தப் பரவசப் பெருவெளி பரிச்சயமாகிவிட்டால் எல்லா சுபமே.
இன்று செப்டெம்பர் 21 உலக அமைதி நாள்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (UN Secretary-General António Guterres ) " போரின் கொடுமை மற்றும் இழிவுகளுக்கு மத்தியில், உலகம் முழுவதும் உயிர்கள் துண்டிக்கப்படுகின்றன, குழந்தைப் பருவங்கள் அழிக்கப்படுகின்றன, அடிப்படை மனித கண்ணியம் நிராகரிக்கப்படுகின்றன " எனக் கவலையை வெளிப்படுத்துகின்றார்.
கொந்தளிப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த இக்காலகட்டத்தில், அமைதிக்காக அணிதிரள்வதற்கு அனைவரும் உறுதியான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். உலக மக்கள் அனைவரும், வன்முறை, வெறுப்பு, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையினைக் களைய வேண்டும். நமது உலகின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதுடன், அனைவருக்குமான மரியாதையுடன் "சும்மாயிரு" ப்பதற்குப் பழகுவோம்.
"சும்மாயிரு" என்பது செயலற்றுப் போதல் அல்ல....
- மலைநாடான்