4தமிழ்மீடியா வளரும்போது அதனுடன் பயணிப்பவர்களும் தகமைசார்ந்து வளரந்திட வேண்டும் என்ற எண்ண வெளிப்பாட்டில், 4தமிழ்மீடியாவின் குழும உறுப்பினர்கள் அனைவரும், ஊடகத்துறைப் பணியில் தொழில்முறை அங்கீகாரம் பெற்றவர்களாக உருவாகி வருகின்றார்கள் என்பது மற்றொரு புறம் மகிழ்ச்சி தரக் கூடியது.
இந்த அங்கீகாரத்தின் ஒரு பகுதியையும், அதன் செயல் வெளிப்பாட்டினையும் இம் மாதத்தின் தொடக்க நாட்களில் நேரடியாக என்னால் அவதானிக்க முடிந்தது. நடந்து முடிந்த லோகார்ணோ சர்வதேச படவிழாவிற்கான ஊடக அனுமதி கோரிய போது, இலகுவில் அது வாய்க்கவில்லை. பெருமுயற்சியின் பின் கிடைத்த அனுமதியுடன் உலகப்படவிழா அரங்கொன்றினுள், உலகின் பிரபலமான ஊடகங்களுக்கு இணையாக நின்று செயற்பட்ட வேளையில், இக் குழுமத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் பணித்திறன் வெளிப்பட்டது. 4தமிழ்மீடியாவின் குழுமத்திலுள்ளவர்கள் பல்துறைச் செயற்பாட்டாளர்களப் பயிற்றுவிக்கப்படுவதன் பயனும் இதே விழாவில் நிருபனமாகியது.
உலகத் திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களைப் பார்பப்பதற்கு மிகுதியான பொறுமையும், நிறைந்த அவதானிப்பும் தேவை. ஹொலிவூட்டின் வணிகச் சினமாக்களை ரசித்துப் பார்க்கும் வயதிலுள்ள மூன்று இளையவர்களோடு இந்த விழா அரங்கில் நுழைந்து, குழுவாகவும், தனியாகவும், பிரிந்தும் இனைந்தும் செயற்பட்ட போது, அவர்கள் அவதானிப்பையும், தகைமையையும், பெருமிதத்துடன் அவதானிக்க முடிந்தது.
ஒவ்வொரு நாளும் இரவில், அன்று பார்வையிட்ட படங்கள் குறித்துப் பேசி, வெற்றிபெறக் கூடிய படங்கள் என எங்கள் குழு கணிப்பிட்ட படங்கள் அத்தனையும், விருது பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது, எமது இளையவர்களின் அவதானிப்புச் சிறப்பு வெளிப்பட்டது. அந்த வகையில் எமது குழுமத்தின் தகைமையை, நாமே பரீட்சித்துப் பார்க்கும் ஒரு களமாகவும் இந்த விழா அமைந்தது. இம்முறை இவ்விழா தொடர்பான காட்சிப்படுத்தல்கள் யாவும், உயர்தரத்தில் பதிவு செய்வதில் 4தமிழ்மீடியாவின் புகைப்பட, வீடியோ படப்பிடிப்பாளர்களான கிற்றி, கபிலன் ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டதன் வெளிப்பாட்டினை, இத் திரைப்படவிழா குறித்த செய்திகளின் பகிர்வுகளில் நீங்கள் அவதானிக்க முடியும்.
4தமிழ்மீடியாவின் செய்திக் குழுமத்தில் இணைந்து கொள்ள பலரும் விரும்பி விண்ணப்பிப்பதுண்டு. ஆனால் அவ்வாறு இணைய விரும்புவர்களின் செயற்திறன் குறித்த சரியான கணிப்பீடுகள் கிடைக்கும் வரை அவர்கள் செய்திக் குழுமத்துக்குள் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. பொருத்தமான நபராக ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின், அவர் எங்கள் குழுமத்தின் செயற்பாட்டுக்குப் பொருத்தமானவராகப் படிப்படியாகப் பயிற்றுவிக்கப்படுகின்றார். இவ்வாறான பயிற்சியுடனேயே 4தமிழ்மீடியாவின் குழுமச் செய்தியாளராக ஒருவர் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்.
இவ்வாறான கணிப்பீடுகளின் பின் அண்மையில் இணத்துக் கொள்ளப்பட்ட செய்தியாளர்களாக றோஸ், எழில்செல்வி, ஹமீது, படப்பிடிப்பாளர் குணா ஆகியோர் தங்கள் பணிகளால் 4தமிழ்மீடியாவுக்கு வலுச் சேர்க்கத் தொடங்கியுள்ளார்கள். இன்னும் சில புதியவர்கள் பயிற்சிக்களத்தில் செயற்படுகின்றார்கள்.
அர்ப்பணிப்பும், செயல் வேகமும், ஊடகத்துறைக்கான நேர்மையும், நேர்த்தியும், உள்ளவராக ஒருவர் காணப்பட்டால், அவரை இணைத்துக் கொள்வதற்கு 4தமிழ்மீடியா என்றும் தயங்குவதில்லை. அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்டதன் பின், அவரது உயர்ச்சிக்கு தேவையான உதவிகளை காலக் கிரமத்தில் படிப்படியாகச் செய்து கொடுப்பதும், வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும், 4தமிழ்மீடியாவின் தார்மீகப் பொறுப்பாக இருந்து வருகிறது. அவ்வாறே செயற்பட்டும் வருகிறது. அந்த வகையில் உண்மையாய் செயற்பட்டவர்கள் உடன் வருகின்றார்கள். மற்றையவர்கள் பாதியில் நின்று விடுகின்றார்கள்.
இந்தச் செயல் ஒழுங்கில், உளப்பூர்வமாகச் செயற்பட்ட சிலரும் சிலபொழுதில் விடுபட்டிருக்கின்றார்கள். அவர்களது பணி எமது திட்டங்களுக்கு பொருந்தா நிலையினில் அவ்வாறானவர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் எங்கள் பணி விரிவுறும் வேளையில் அவர்களுக்கு முன்னிலை கொடுத்து இணைத்துக் கொள்ளவே என்றும் விரும்புவோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.
வெவ்வேறு நாடுகளிலிருந்து செயற்படும் செய்தியாளர்களுடன், அவ்வாறே வேறுவேறு நாடுகளில் இருந்து செயற்படும், தலைமைச் செய்தியாளர்களும் கட்டுரையாளர்களுமான, வேல்மாறன், நாகன், மாதுமையாள், இணைந்த இக்குழமத்தின் கூட்டுழைப்பில், தேச எல்லைகள் கடந்து, உலகத் தமிழர்களுக்கான தகவல்களைத் திரட்டி, தமிழ்மொழியில் செய்திப் புதினங்களாக்கி, தினமும் உலகை புதிதாய் காணும் வண்ணம், உங்கள் கணினிவலைகளின் வழி கொண்டு வந்து தருகிறது 4தமிழ்மீடியா.
புனிதர்கள் அல்ல நாங்களும் மனிதர்களே. எங்களிடம் தவறுகளும் உண்டு. தவறெனப்படுவதை தட்டிக் கழிக்காது ஏற்றுக் கொள்ளவும்,
திருத்திக் கொள்ளவும் முடியும் எனும் எண்ணமும் உண்டு. அறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலில், தினமும் தேடலிலும், கற்றுக் கொள்ளலிலும் ஆர்வம் நிறைந்த மாணவர்களாகவே என்றும் இருக்க விரும்புவதாலேயே, தினமும் உலகைப் புதிதாய் 4தமிழ்மீடியாவில் காணமுடிகிறது.
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு, நடைமுறைகளின் சாத்தியத்தில் 4தமிழ்மீடியாவின் பயணம் தொடர்கையில், தொடரமுடியாது போனவையாகப் பலவுண்டு.
தமிழ்வலைப்பதிவுகளின் பதிவுகளைத் திரட்டிப் பகிரும், 'தமிழ்பெஸ்ட்',
தமிழகச் செய்திகளை அதிகம் பகிரும் நோக்கில் உருவான '4தமிழ்மீடியா தமிழ்நாடு',
வாசகர்களே செய்தியாளர்களாகச் செயற்படக் கூடியதான, 'Your Report', அச்சுப் பத்திரிகையாக வெளியிடப்பட்ட 'ஆனந்தி' மாதசஞ்சிகை, என்பன இடையில் விடுபட்ட எங்கள் செயற்பாடுகளில் முக்கியமானவை எனலாம். இவை தொடரமுடியாது இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணங்கள் பல. ஆனால் எப்போது வேண்டுமானாலும் மீளவும் தொடரக் கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும் செயற்திட்டங்கள் அவை.
ஐரோப்பியச் சஞ்சிகைத் தரத்தில், அச்சுப் பத்திரிகையாக 'ஆனந்தி' சஞ்சிகை உருவானபோது, அதற்கு பெரும் பலமாக நின்றவர்கள் சிலர். தன்னார்வமாக உதவியவர்கள் பலர். சில புறச்சூழல்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அம் முயற்சியில் துணையாக இருந்தவர்களில், 4தமிழ்மீடியாவின் ஆரம்பகாலச் செய்தியாளர்களான, திருச்சி வடிவேல், இலண்டன் எழில்ராஜன், சென்னையைச் சேர்ந்த பாரதி நந்தன், தன்முனைப்புக் கட்டுரையாளர் சுரேகா, வலைப்பதிவுகள் குறித்த அறிமுகங்களைத் தொகுத்துத் தந்த வலைப்பதிவர் கயல்விழி முத்துலெட்சுமி, வரைகலையில் உதவிய சுகுமார் சுவாமிநாதன், வடிமைப்பில் பங்குகொண்ட தமிழ்அலை இஷாக், இனிக்கும் இலக்கியத்தை தன் இனிய குரல் ஒலிப்பதிவில் தந்த ஷைலஜா, ஆகியோரின் அக்கறை மிக்கப் பணி என்றும் நினைவிற் கொள்ளத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் இச் சஞ்சிகை விநியோகத்தினை தாமாகவே முன்வந்து பொறுப்பேற்றுச் செய்த நண்பர்கள் நினைவில் நீங்காதவர்கள். அவர்களது அரிய தொடர்புகளினால்தான் ' ஆனந்தி ' சஞ்சிகையைத் தொடங்கிய இருமாதங்களிலேயே ஐந்துக்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் விநியோகிக்க முடிந்தது.
இவ்வாறான மீள்நினைவுகளில் மறக்க முடியாத மற்றுமொரு நட்பு, ஜேர்மனியிலிருந்து ஒலிபரப்பாகும், ETR வானொலியின் ஸ்தாபகரும் நிர்வாகியுமான ரவிமாஸ்டர். 4தமிழ்மீடியாவின் ஆரம்பகாலங்களில் அதன் வானொலிப் பகுதியில் ETRன் ஒலிபரப்பு இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பின் தளவடிமைப்புக்கள் மாற்றியமைக்கப்பட்ட போது, இப்பகுதிகள் நிறுத்தப்பட்டன.
இவ்வாறு தொடங்கிய பலவற்றைத் தொடர முடியாது போயினும் புதிய செயல்வடிவங்களை முயற்சித்துப் பார்க்கத் தவறியதில்லை. அந்தவகையில், அனுபவக் கற்கையிலும், அறிவார்ந்த தேடலிலும், நாம் கற்றுக் கொண்டதை, நாளும் கற்றுவருவதை, ஏனையோருக்கும், பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில், உருவாகியுள்ள புதிய செயல் வடிவம் '4Tamilmedia creative Lab'.
4தமிழ்மீடியாவின் ஐந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் '4தமிழ்மீடியா படைப்பாய்வகம்' எனும், இப் புதிய செயற்திட்டம், ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கு, ஆதரவாகச் செயற்படக் கூடியது. எம்மோடு இணைந்து செயற்பட விரும்பும், படைப்பாளிகளுக்கு, அவர்களது படைப்புக்களின் உருவாக்கத்தில், அவர்களது தனித்துவம் கலைந்து போகாவண்ணம், உடனிருந்து உதவுவது, முடிந்தவரையில் பங்கொள்வது இதன் பிரதான நோக்கமாகும். ஆவணப்படம், குறும்படம், இசைவெளியீடு, நூல்வெளியீடு என்பவற்றில் ஆர்வமாக இருக்கும் படைப்பாளிகளுக்கு, வேண்டிய ஆலோசனைகளை, உடன்பாட்டின் அடிப்படையிலான உதவிகளை மேற்கொண்டு, அவர்களது கலைப் படைப்புக்களைக் வெளிக் கொணர்வதற்கும், பின் அவற்றை வெளிப்படுத்துவதற்கும் வகை செய்யும் இப் புதிய செயல் திட்டம். இதற்குத் தேச எல்லைகள் கிடையாது. திறமையும், ஆர்வமும், முடியும் எனும் தன் முனைப்பும் இருக்கும் தமிழர்கள் எவரும் தயங்காமல் நாடலாம். மனந் திறந்து பேசுவோம், இணைந்து செயற்படுவோம்.
;
இந்தப் புதுமுயற்சியின் முதல் அறுவடையாக உருவாகியுள்ள ஒரு ஆவணப்படத்தின் முன்னோட்டத்தினையே இங்கு பார்த்தீர்கள். தொன்மைக் கலையான தோற்பாவைக் கூத்தின் வரலாற்றினை, அக் கதைசொல்லியின் உரையாடல்வழி பதிவு செய்கிறது 'கதைசொல்லி ' எனும் இவ் ஆவணப்படம். சுமார் 40 நிமிடங்கள் கதையோடும் கலையோடும் நகரும், இந்த ஆவணப்படத்தின் மூலமொழி உரையாடல் தமிழிலும், அந்த உரையாடல் ஆங்கிலம், பிரெஞ், ஆகிய மொழிகளில் உப தலைப்புடனும் வருகிறது. இணைத் தயாரிப்பு என்ற வகையிலும், ஆலோசனைகள் வழியிலும், இந்த ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் இணைந்துள்ளது '4Tamilmedia creative Lab'.
4தமிழ்மீடியாவின் முதலாவது ஆண்டு நிறைவு குறித்து யுவகிருஷ்ணா எழுதிய சிறப்புக் கட்டுரையில், ' நான் 4தமிழ்மீடியாவை அதிகமாக பாவித்த காலக்கட்டம் 2009 மே 18 வாரத்தில்தான். பல இணையத்தளங்களும், அச்சு ஊடகங்களும் உணர்ச்சிவசப்பட்டு தாங்கள் செய்தியாளர்கள் என்பதையும் மறந்து ஒருவித ஆவேச மனோபாவத்தில் செய்திகளை எழுதிக் கொண்டிருந்தத நேரம் அது. 4தமிழ்மீடியா அந்நேரத்தில் உச்சபட்ச நிதானத்தோடு நடந்துகொண்டது. வழக்கம் போல செய்திகளை செய்திகளாகவே தன்னுடைய இயல்பான குணாதிசயங்களோடு வழங்கி வந்தது. ஒரு நல்ல ஊடகத்தின் பண்பு என்பது இதுவாகத்தான் இருக்கும். இந்த ஊடகத்தை நடத்துபவர்களுக்கு ஏதேனும் சார்புகள் இருக்கலாம். ஆயினும் இந்த ஒருவருட காலத்தில் 4தமிழ்மீடியா யாருக்கு சார்பானது என்பதை அறியமுடியா வகையில் செய்திகளை வழங்கும் விதத்தில் உண்மையான நடுநிலையோடு செயல்படுகிறது என்பதை மனம் திறந்து சொல்கிறேன் " எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணங்களிலும், அந்த ஊடகப் பண்புடனேயே இருந்து வருகின்றது. கடந்து வந்த நான்கு ஆண்டுகளில் நடந்து வந்த பயணத்தின் பாதை கரடு முரடானதாக இருந்த போதும், கொண்ட கொள்கையில் மாற்றம் கண்டதில்லை. ஏனெனில் இது மக்களுக்கான ஊடகம்.
எமது வாழ்வின் சுவடுகளை, வரலாற்றின் பதிவுகளை, ஆவணங்களாக, அழகான சித்திரங்களாக, இனிக்கும் இலக்கியமாக, இன்னும் பல புதிய வடிங்களாகப் படைத்திட விரும்பும் எல்லோரையும், வாருங்கள் என வாஞ்சையோடு அழைக்கின்றோம். இச் செயற்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவர்கள், உங்கள் எண்ணங்களை
எங்கள் கலைகளை, எம்மவர் திறமைகளை, வெளிப்படுத்த விரும்பும் வேறுபல நிகழ்வுகளிலும் பங்கு கொள்ளும், அதேவேளையில், ' எட்டுத் திக்கும் செல்வீர் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ' எனும் பாரதியின் எண்ணச் சிந்தனைகளின் வழித் தடத்தில் இன்னும் சில பயணங்களைத் தொடங்கவும் உள்ளோம் என்பதையும் சொல்லி, இத் தொடரினை நிறைவு செய்கின்றேன்.
வாழ்த்துங்கள் எண்ணிய முடிதல் வேண்டுமென ..
என்றும் மாறா இனிய அன்புடன் : மலைநாடான்
No comments
Comments are closed
The comments for this content are closed.